பள்ளி வகுப்பறையில் திடீரென மயக்கமடைந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மற்றொரு மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருத்தணியை அடுத்த அகூர் இருளர் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித் தொழிலாளியான இவரது மகள் மீனா (12). அதே கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் மகள் கீதா (13). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 6, 8-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் சக மாணவிகளுடன் இருவரும் பள்ளிக்கு சென்றனர். வகுப்பறைக்கு சென்ற சிறிது நேரத்தில் மீனாவும், கீதாவும் திடீரென மயக்கம் அடைந்தனர்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், கிராம மக்கள் உதவியோடு மாணவிகள் இருவரையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறி, முதல் உதவி சிகிச்சை அளித்து, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கீதா உயிரிழந்தார்.
மீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து மாணவி இறந்ததும், மற்றொரு மாணவி தீவிர சிகிச்சையில் இருப்பதும் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி கோட்டாட்சியர் விமல்ராஜ், அகூர் இருளர் காலனிக்குச் சென்று, அப்பகுதியில் மர்மக் காய்ச்சல் ஏதும் பரவுகிறதா? மாணவி திடீரென இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
