சென்னை வளசரவாக்கத்தில் தனியார் பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவன் உயிரிழப்பு:
சென்னை வளசரவாக்கத்தில் தனியார் பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் - ஜெனிபர் தம்பதியின் 7 வயது மகன் தீக்சித் கடந்த 28-ம் தேதி பள்ளி வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், ஓட்டுநர் பூங்காவனம், ஞானசக்தி ஆகியோர் கைது செய்தனர். மேலும் பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுக்குறித்து விசாரணை நடத்திய போலீசார், பள்ளியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில், பள்ளி வேனைவிட்டு இறங்கிய தீக்சித், பள்ளிக்கு நடந்து சென்றபோது தான் விபத்து நேரிட்டது தெரியவந்தது. மாணவன் செல்வதை கவனிக்காமல் வேனை ஓட்டுநர் முன்பக்கமாக இயக்க, தீக்சித் மீது வேனின் முன்சக்கரம் ஏறி இறங்கிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
சிக்கிய சிசிடிவி:
முன்னதாக வேனிலிருந்து அனைத்து மாணவர்களும் இறங்கிய நிலையில், தீக்சித் மட்டும் வேனில் தான் மறந்து வைத்துவிட்டு சென்ற பொருளை எடுப்பதற்காக திரும்பி வந்ததாகவும் எதிர்பாராதவிதமாக, வேனை பார்க்கிங் செய்வதற்காக ஒட்டுநர் பூங்காவனம் ரிவர்ஸ் எடுத்த போது, வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித்யை கவனிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. வேன் திடீரென்று நகர்ந்ததால், மாணவன் தீக்சித் படியில் இருந்து தவறி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி விபத்து நேரிட்டது பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் பூங்காவனம், மாநகராட்சியில் ஓட்டுநராக வேலை பார்த்ததும், ஓய்வுபெற்றதையடுத்து பள்ளியில் ஓட்டுநர் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது. மேலும் அவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. ஒரு காது சரியாக கேட்கவில்லை. 64 வயதாகும் அவர் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பள்ளி தாளாளருக்கு நோட்டீஸ்:
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள 12 கேள்விகளுக்கு 2 நாட்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டதாக கூறப்பட்டது. இதனிடையே தற்போது பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: பள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவன்.. பள்ளி தாளாளரிடம் கேட்கப்பட்ட 10 கேள்விகள்.. 2 நாட்களில் பதிலளிக்க உத்தரவு.
