புதுக்கோட்டை

நெடுவாசலில் ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 15-வது நாளான நேற்று கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு பெண்கள், சிறுவர்கள், மக்கள் போராட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது மோடி அரசு.

இந்த திட்டத்திற்கு பலியான இடங்களில், தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் பகுதியும் ஒன்று.

மத்திய அரசின் இந்த திட்டத்தை கண்டித்து நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மக்களுக்கு விருப்பமில்லாத எதையும் மோடி அரசு செய்யாது என்று தமிழிசை முதல் எச்.ராஜா வரை ஒருபக்கம் கொக்கரித்தாலும், மறுபக்கம் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு இரட்டைவேடம் போடுகின்றனர் பாஜகவினர்.

இதற்கு முதல்முறை பலியான மக்கள், இந்த முறை நெடுவாசலில் ஐட்ரோகார்பன் திட்டம் ரத்து என்ற அறிவிப்பு வரும் வரை போராட்டத்தை விடமாட்டோம் என்று ஒரு முடிவோடு மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே கடந்த 12-ஆம் தேதி இந்த போராட்டம் தொடங்கியது. இதில் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி 15-வது நாளான நேற்று நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை வன்மையாக கண்டித்தும் பல்வேறு முழக்கங்களாய் எழுப்பினர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மக்கள் என போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தங்களாது கண்களில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.