திருச்சி

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை காலம் கடத்தாமல் அரசு விரைந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழக அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு போக்குவரத்து கழக அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு திருச்சி மண்டலத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பழனிசாமி, சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை சேர்ந்த சீனிவாசன், ஏ.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது அமைச்சர்கள் குழு தொழிற்சங்கங்களோடு பேசி ஏற்றுக் கொண்டதை அரசு அமல்படுத்த வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை காலம் கடத்தாமல் அரசு விரைந்து பேசி தீர்வு காண வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினரும் மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டம் காலையில் தொடங்கி மாலை வரை நடந்து முடிந்தது.