கடலூர்,

கடலூரில் வங்கி முன்பு, நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து சிறிதுநேரம் முழக்கமிட்டுவிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கியில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஏ.டி.எம்.களும் மூடிக்கிடக்கின்றன. இதனால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

எனவே, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இதற்காக அவர்கள் கையில் கருப்புக் கொடியுடன் கடலூர் அம்பேத்கார் சிலை அருகில் திங்கள்கிழமை காலையில் திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வங்கி முன்பு வந்தனர். வங்கி வளாகத்துக்குள் அவர்கள் செல்ல முடியாத படி அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

இதையடுத்து அங்கு அவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் சிறிதுநேரம் முழக்கமிட்டுவிட்டுக் கலைந்துச் சென்றனர்.

இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். அகில இந்திய அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், வட்ட செயலாளர் ஜெகரட்சகன், ஒன்றிய செயலாளர்கள் ராஜீ, திருமலை, சக்திவேல், வட்ட செயலாளர் ஏ.கே.சுப்பிரமணியம், கலிய பெருமாள், நகர செயலாளர்கள் குணசேகரன், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.