Strong opposition on CBCNL - fisher men against commissioner office
பல்வேறு நாடுகளில் இருநது சென்னை துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் வரப்படுகிறது. இங்கிருந்து மணலி சிபிசிஎல் நிவனத்துக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட ராட்சத குழாய் மூலம், எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.
ஏற்கனவே இங்கு பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் சேதமாகி இருப்பதால், அடிக்கடி எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், இந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு, குடிநீரில் ஆயில் கலந்தது.
இதையொட்டி தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். இதனால், இந்த குழாய்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து சிபிசிஎல் நிறுவனம் உள்ள பழைய குழாய்களை அகற்றிவிட்டு, புதிய ராட்சத குழாய்களை அமைக்க, அந்நிறுவனம் முடிவு செய்தது.
இதற்கு காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய மீனவ கிராம மக்களும், குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மீனவ கிராம நிர்வாகிகள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் சிபிசிஎல் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அதில் உடன்பாடு ஏறபடவில்லை. இதையடுத்து, குடியிருப்பு பகுதியில் ராட்சத குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலெக்டர் , மாநகர போலீஸ் கமிஷனர், முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த 100க்கு மேற்பட்ட பெண்கள், சென்னை மாநகர கமிஷனர் அலுவலகம் சென்றனர்.
அங்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் ராட்சத குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
அதை பெற்று கொண்ட அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வெளியே வந்த மீனவ பெண்கள், கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து போலீஸ் உயர் அதிகாரிகள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் பேசி, அனைவரையும் கலைய செய்தனர்.
இதுகுறித்து மீனவ பெண்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் ராட்சத குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் அழைத்தனர். உதவி கமிஷனர் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.
அப்போது அவர்கள் கொடுத்த விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால், அந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
ஆனால், சிபிசிஎல் அதிகாரிகள், எங்களது குடியிருப்புகளின் கீழே, பூமிக்கடியில் ராட்சத குழாய் பதிக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும்.
இப்பகுதி கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் எங்கள் வீடுகள் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்படும். மேலும், கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், கடல் வாழ் மீன்களும் இறக்கும். இதையொட்டி எங்களது மீன்பிடி தொழில் பாதிக்கும்.
இதை தடுத்து நிறுத்தும்படி ஏற்கனவே பல அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், இன்று கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் என்றனர்.
