சிவகங்கை

சிவகங்கையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை கோட்டத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் மத்திய அரசிடம் 7-வது ஊதியக் குழுவில் அமல்படுத்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியனர்.

அதன்பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி கமலேஷ் சந்திரா குழு இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஊழியர்களிடம் குறைகள் பற்றி கேட்டறிந்தும், நேரடியாக ஆய்வும் செய்தது.

பின்னர், 38 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மத்திய அரசிடம் சிபாரிசு செய்தது.

மேலும் நடுவர் மன்றம் உத்தரவிட்டும் கோரிக்கைகளை மத்திய அரசு அமல்படுத்தாததால் மூன்றாம் கட்டப் போராட்டங்களை மத்திய, மாநில சங்கம் அறிவித்தது.

அதன்படி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டத்தில் சங்கத்தின் சார்பில் காரைக்குடி தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் காரைக்குடி கோட்டத்தலைவர் எஸ். சிவக்குமார் தலைமை தாங்கினார். கோட்டச்செயலாளர் எம். ரவி ஆறுமுகம் வரவேற்றுப்பேசினார். அதைத்தொடர்ந்து கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்குடி கோட்டத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சுமார் 116 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தொடர் வலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.