Strike in Kerala market dull Rs 4 crores business affected...

திண்டுக்கல்

ஜி.எஸ்.டியை எதிர்த்து கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்ததால் அங்கிருந்து எந்த வியாபாரிகளும் வராததால் ஒட்டன்சத்திரம் சந்தை டல் அடித்தது. மேலும், ரூ.4 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்று வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. இந்த சந்தைக்கு ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்படும்.

இதுதவிர ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்படும்.

காய்கறிகளை கொள்முதல் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் வருவர். இதனால் இந்த சந்தை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.

இங்கிருந்து காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பியும் வைக்கப்படும். குறிப்பாக 70 சதவீதம் காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் தினமும் ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

வறட்சி காரணமாக தற்போது காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், குறைந்தளவே காய்கறிகள் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இதனால் காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரியைக் கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்று கேரள வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வரவில்லை.

அதனால் பல்வேறு கடைகளும் பூட்டப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஒட்டன்சத்திரம் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஒரு சில விவசாயிகள் மட்டுமே காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

கேரள வியாபாரிகள் வராததால் ரூ.4 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாதிக்கப்பட்ட வியாபாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.