திருவள்ளூர் ஆசிரமத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர் மீது எந்த தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

திருவள்ளூர் ஆசிரமத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர் மீது எந்த தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமத்தில் ஓடை ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து முனுசாமி என்பவர் அருள்வாக்கு கூறி வருகிறார். இவரிடம் ஒரு மாணவியை அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த 18 மாதங்களாக ஆவி, பேய், பிசாசு உள்ளிட்ட சேட்டையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உறவினர்களால், அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அடிக்கடி இக்கோவிலில் அப்பெண்ணை தங்க வைத்து பூஜை செய்து வந்துள்ளனர். அந்த கோவில் பூசாரி முனுசாமி வீட்டில் அவரது மனைவியுடன் தங்கி பூஜை செய்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவி தனது பெரியம்மா மற்றும் தங்கையுடன் கோவிலுக்குச் சென்று பூஜை செய்துள்ளார்.

நள்ளிரவு பூசாரி முனுசாமியின் மனைவியுடன் தூங்கச் செல்வதற்கு முன்பு மாணவிக்கு தேங்காய் பூசணிக்காய் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளனர். இரவு மாணவியுடன் வந்த அவரது தங்கை உள்ளிட்ட நான்கு பெண்கள் கோவில் பூசாரி முனுசாமிக்கு இட்லி தோசை சமைத்து கொடுத்ததுடன் பரிமாறி பணிவிடை செய்து உள்ளனர். பூசாரி முனுசாமியின் அறையில் மாணவி மற்றும் அவரது தங்கை படுத்து தூங்கி உள்ளனர். அதிகாலையில் மாணவி திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து மயங்கி பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். கோவில் பூசாரி முனுசாமியின் மனைவி மட்டும் எழுந்து வந்து மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த மாணவியின் பெரியம்மாவை எழுப்பி கூறியுள்ளார். உயிருக்கு போராடியவரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Scroll to load tweet…

இது தொடர்பாக காவல்துறையினர் பூசாரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி 18 மாதங்கள் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பூசாரி வீட்டில் தங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மாணவி தற்கொலைக்கும் காரணமானவர் யாராக இருந்தாலும் அவர் மீது எந்த தயவு தாட்சண்யமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், மிகுந்த வேதனைக்குள்ளாகிற கடும் கண்டனத்துக்குறியச் சம்பவம் இது. குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் அவர்களின் சமூக விரோத கட்டமைப்பின் மீதும் எந்த தயவு தாட்சண்யமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.