sterlite 100th day protest

குமரெட்டியார்புரம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குக்கிராமம். இந்தக்கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரமும் தங்களது உடல் ஆரோக்கியமும் ஸ்டெர்லைட் ஆலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராடி வருகின்றனர். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறிக் கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்தது. இது கும்ரெட்டியார்புரம் அருகே அமைய இருந்ததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என கிராம மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வருகின்றனர்

ஸ்டெர்லைட் ஆலையால் தாய்ப்பால் தரவேண்டிய குழந்தைகளுக்கு நோயின் பாதிப்பால் தினமும் மருந்து மாத்திரையை கொடுக்க நேரிடுவதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.எல்லா குழந்தைகளும் காலையில் எழுந்தவுடன் காஃபி குடிக்கும். ஆனால் எங்கள் குழந்தைக்கு சங்கெடுத்து மாத்திரை தான் கொடுக்க வேண்டும். எங்களுடைய காலம் முடிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் எங்கள் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்..? ஸ்டெர்லைக்கு ஆதரவாக கூட சிலர் பேசுகின்றனர். அவர்கள் எங்கள் குழந்தைகள் குறித்து குறைந்தப்பட்சம் ஒரு நிமிடமாவது யோசித்து பார்க்க வேண்டாமா..? நாசமாக போகும் ஸ்டெர்லைட் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். எங்கள் குழந்தைகளின் சாவை நாங்கள் யாரும் பார்க்க விரும்பவில்லை என்றனர்.

100நாளாக இந்த போராட்டம் நடந்துவரும் நிலையில் போராட்டம் நட்த்த 144 தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களை தடுத்து நிறுத்தும் காவல்துறைக்கும் மக்களுக்கும் தள்ளூமுள்ளு ஏற்பட்டுவருகின்றது. தடையை மீறி நடக்கும் போராட்டத்தில் ஜீதாஜீவன் எம்.எல்.ஏ ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.