Stealth Gas sold hooligan home cooking
நொய்யல்
கரூரில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டில் வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்தவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து வீட்டிற்கு பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே பெரியவரப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (54). இவர் தனது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்து, சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்து வருகிறார் என்ற தகவல் மண்மங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் சுதாவிற்கு கிடைத்தது.
இதனையடுத்து சுதா மற்றும் பறக்கும்படை வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் செல்லமுத்துவின் வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்து சரக்கு வேனில் ஏற்றி, செல்லமுத்துவை மண்மங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்துகின்றனர்.
இதுமட்டுமின்றி, செல்லமுத்து அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து, தனது வீட்டு தேவைக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து கரூர் மின்சார வாரிய கோட்ட பொறியாளர் ஜெயசிங் பாஸ்கரனுக்கு தகவல் வந்தது.
பின்னர், அவரது உத்தரவின் பேரில், உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் பழனிவேல் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது செல்லமுத்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்தது உண்மை என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. மின் இணைப்பை துண்டித்துவிட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
