பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கூட்டாளியான புஷ்பராஜின் புதுச்சேரியில் உள்ள கலைக்கூடத்தில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பிரபல சிலை கடத்தல் மன்னனான தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள 200க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள், ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து தீனதயாளனின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தீனதயாளனுக்கு தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இருந்து 43 சிலைகளை கடத்தி வந்து விற்ற முக்கிய கூட்டாளியான புஷ்பராஜ் (45) என்ற சிலை கடத்தல் முக்கிய புள்ளியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவனிடம் விசாரணை நடத்தியதில் சின்ன சேலத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஓவியத்தை கடத்திவந்து தீனதயாளனிடம் விற்பனை செய்ததை கோயில் நிர்வாகத்தினர் நேரில் வந்து பார்த்து கண்டுபிடித்து சாட்சியமளித்தனர்.
கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விபிஎம் கிளாசிக் கேலரி என்ற பெயரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கலைக்கூடம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

புதுச்சேரியில் பிரடரிக் ஒசானம் தெருவில் 3வது குறுக்குத் தெருவில் உள்ள கலைக்கூடத்தில் தமிழகத்தில் திருடப்பட்ட சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கலைக்கூடத்தில் சோதனை நடத்த கோர்ட் அனுமதிபெற்று நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர்.
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், டிஎஸ்பி சுந்தரம், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் தனிப்படையினர் சோதனை நடத்தியதில் கலைக்கூடத்தின் ஒரு அறையில் கட்டிலுக்கு அடியில் 11 சிலைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
மூன்றரை அடி உயரம் உள்ள சந்திரசேகர் சிலையும் இதில் அடக்கம். பதுக்கி வைக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கலைக்கூடத்திற்கு போலீசார் சீல் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மீண்டும் இன்று அறை திறக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. இதில் மேலும் பல முக்கிய சிலைகள் சிக்கும் என தெரிகிறது.
