சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலோடு அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றக்கோரி உள்துறை செயலாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் உள்ள புராதன சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பல் கொள்ளையடித்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால், தமிழகம் முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து  வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே போன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள, உற்சவர் சிலை மற்றும் மூலவர் சிலைகள் சேதம் அடைந்துள்ளது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட கோரி, ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, சிலை கடத்தல் தொடர்பான புகார்கள், வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றார். அப்போது நீதிபதிகள், இதுவரை விசாரணை நடத்தி வந்த சிறப்பு புலனாய்வு குழு சரியாக செயல்படவில்லையா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு கடந்த ஓராண்டாகியும் அரசுக்கு எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. 

சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தியதில் அரசுக்கு  திருப்தி இல்லை. எனவே சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரணை நடத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றார். அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் குறுக்கிட்டு, சிபிஐ விசாரணை தொடர்பான அரசின் உத்தரவு எங்கே என்றார். அதற்கு கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர், அந்த உத்தரவு நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் நேற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் அரசின் ஆணை வந்தால் அது கொள்கை முடிவாக இருந்தாலும் அதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று நீதிபதிகளிடம் யானை ராஜேந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.