ஆம்பூர்

ஆம்பூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்ததில் இருந்த மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதில் இருந்து, கணக்குகளில் டெபாசிட் செய்வது, ஏ.டி.எம் மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பது மற்றும் எடுத்த பணத்திற்கு சில்லைரைத் தேடி கடைக் கடையாக ஏறி இறங்குவது என பல்வேறு துயரங்களையும் மோடியின் அறிவிப்பு மக்களுக்கு இந்த வருட புத்தாண்டு பரிசாக கொடுத்தது.

வங்கி திறப்பதற்கு முன்பே, காலையில் சென்று வரிசையில் நிற்கும் மக்களுக்கு வங்கியில் போதுமான பணமும் கிடைப்பதில்லை. மரியாதையும் கிடைப்பதில்லை. வங்கி அதிகாரிகள் அலட்சியத்தை பதிலாக தெரிவித்து மக்களின் அமைதியை சோதிக்கின்றனர்.

புத்தாண்டில் இருந்து ஏ.டி.எம்மில் 4500 ரூபாய் பணமும், வங்கிகளில் 24000 ரூபாயும் பெறலாம் என மோடி வாய்வார்த்தையாக தெரிவித்துள்ளார். உண்மையில், ஏ.டி.எம்மில் 500 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் 4000 ரூபாயை மட்டுமே தருகிறது.

வங்கிகளில் இன்னும் மோசம், இருப்பைப் பொறுத்து 4000 தருகிறோம் 6000 தருகிறோம் என பேரம் பேசுகின்றனர் வங்கி அதிகாரிகள்.

இந்நிலையில், இன்று ஆம்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு பணமில்லை என்று வங்கி அதிகாரிகள் கையை விரித்துள்ளனர். இதனால், சினம் கொண்ட மக்கள் வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், வங்கி எதிரில் சாலை மறியிலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.