நீட்டை எதிர்த்து ஆசிரியை  பதவியை ராஜினாமா செய்துள்ள சபரிமாலாவின் உணர்வை மதிப்போம் என்றும், ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி-கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலா, தனது 7 வயது மகனுடன் பள்ளி முன்பு உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

இப்போராட்டத்துக்கு அரசு அனுமதியளிக்க மறுத்த காரணத்தினால் தன்னுடைய சபரிமாலா  தனது ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆசிரியை சபரிமாலா ராஜினாமா செய்தது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் , நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: அவரது உணர்வை மதிப்போம். ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!  என குறிப்பிட்டுள்ளார்.