stalin statement about kathiramangalam protest
கதிராமங்கலத்தில் சுமூக நிலை நிலவுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது, காவல்துறை அராஜகத்தை மறைக்கும் முயற்சி என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு அங்குள்ள மக்களே காரணம் என தமிழக சட்டப் போவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் தடியடி நடத்தப்பட்டதற்கு காரணம், மாவட்ட ஆட்சித் தலைவர் மக்களை நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து விளக்காதது தான் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தீ வைப்பது இப்போதைக்கு தமிழக காவல்துறையில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளின் டிரென்ட் ஆகிவிட்டது. ஏதாவது போராட்டம் என்றால், எங்காவது தீ வைத்துவிட்டு, உடனே போராட்டக்காரர்கள் மீது பழிசுமத்தி, தடியடி நடத்தும் புதுக் கலையை அதிமுக அரசு போலீஸ் அதிகாரிகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதோ என சந்தேகம் எழுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீஸாரே தீ வைத்த காட்சிகளை பார்த்த மக்களுக்கு, கதிராமங்கலத்தில் உள்ள 'வைக்கோல் போரில் போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள்”, என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை அப்பாவி விவசாயிகள் மீது முதலமைச்சர் சுமத்தியிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, கதிராமங்கலத்தில் போலீஸார் போட்டுள்ள அனைத்துப் பொய் வழக்குகளையும் உடனடியாக ரத்துசெய்து, சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட விவசாயிகளையும், பொது மக்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
போராடும் மக்களை சந்திக்க மறுத்து இப்படியொரு மோசமான நிகழ்வுக்கு வித்திட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்… தீ வைப்பில் ஈடுபட்ட உண்மையான போலீஸ் அதிகாரிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… பொதுமக்களின் போராட்டத்தில் இதுபோன்ற கலாசாரத்தை புகுத்துவதை வேரறுக்க வேண்டும்… கதிராமங்கலத்தில் உள்ள போலீஸாரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்… என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
