தேர்தல் நேரத்தில் தான் மோடிக்கு பாசம் பொங்கும்.! தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போடுகிறார்-ஸ்டாலின்
சிலிண்டர் விலையை 10 ஆண்டுகளாக 500 ரூபாய்க்கும் மேல உயர்த்திட்டு, இப்போது 100 ரூபாய் மட்டும் குறைக்கிறது. அப்பட்டமான மோசடிவேலையில்லையா இது? இதைவிட மக்களை ஏமாற்றுகிற செயல் இருக்க முடியுமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியில் ஸ்டாலின்
தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கும் விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்யில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் - தருமபுரி – கிருஷ்ணகிரி என்று மூன்று மாவட்டங்களுக்குமான முத்தான விழா இது!
’முத்துக்கள் மூன்று’ என்று சொல்லக்கூடிய வகையில் நேரு – பன்னீர்செல்வம் - சக்கரபாணி ஆகியோரது செயல்பாடுகள் இதில் அடங்கியிருக்கிறது! இவர்களுடைய செயல்பாடுகளால் இந்த மாவட்டங்களின் மக்களின் அன்புக்கு அவர்கள் சொந்தமாகிவிட்டார்கள். கட்சிப் பணியாக இருந்தாலும் - ஆட்சிப் பணியாக இருந்தாலும் – அதே வேகத்துடனும், விவேகத்துடனும் செய்து முடித்து காட்டுகிற ஆற்றல் உரியவர்களாக இருக்கக்கூடியவர்கள் அவர்கள்.
ஆக்சிஜனை நிறுத்தும் செயல்
அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து நாம் செயல்படுகிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அப்படி மாநிலங்களை சமமாக நினைக்கின்றதா? ஒன்றிய அரசு என்றால், எல்லா மாநிலங்களையும் மதிக்கணும்! வளர்க்கணும்! ஆனால், இன்றைக்கு ஒன்றியத்தை ஆளுகின்ற அரசு அப்படி செயல்படவில்லை! மாநிலங்களையே அழிக்க நினைக்குது. மாநிலங்களை அழிக்கிறது மூலமாக நம்முடைய மொழியை பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது. இனத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது நிதி. அந்த நிதி ஆதாரத்தை பறிப்பது மாநில வளர்ச்சிக்கான ஆக்சிஜனை நிறுத்துகின்ற மாதிரி! அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள். மாநிலங்கள் ஒன்றிணைந்ததுதான் ஒன்றிய அரசு! இதை உணராமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
தேர்தல் நெருங்கி வருகிறது! மாண்புமிகு பிரதமரும் அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார்! இந்த சுற்றுப்பயணங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள். இதை வெற்றுப் பயணங்களாகதான் பார்க்கிறார்கள். இதை சுற்றுப்பயணமாக பார்க்கவில்லை. இந்த பயணங்களால் ஏதாவது வளர்ச்சித் திட்டங்கள் இருக்கிறதா? 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இப்போதுதான் கட்டுமானப் பணியை தொடங்கப் போவதாக நாடகம் நடத்துகிறார்கள். தேர்தல் முடிந்ததும் நிறுத்திடுவார்கள். தேர்தல் வருகிறது என்று குறைத்ததுபோல அறிவிக்கிறார் பிரதமர். சிலிண்டர் விலையை 10 ஆண்டுகளாக 500 ரூபாய்க்கும் மேல உயர்த்திட்டு, இப்போது 100 ரூபாய் மட்டும் குறைக்கிறது. அப்பட்டமான மோசடிவேலையில்லையா இது? இதைவிட மக்களை ஏமாற்றுகிற செயல் இருக்க முடியுமா?
தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் ஒட்டிக்கிறார்
சென்னையில் வெள்ளம் வந்தபோது. பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி - தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி இப்போது மட்டும் அடிக்கடி வருகிறாரே? என்ன காரணம்? தேர்தல் வரப் போகிறது. ஓட்டு கேட்டுதான் வருகிறார் என்று மக்களுக்குத் தெரியும். 'தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன்' என்று சொல்லி இருக்குறார் பிரதமர் அவர்கள். தமிழ்நாட்டுக்கு கொடுத்திருக்கார்? அவர் வளர்ச்சி நிதியை ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டு நிறுத்தியதால், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை.
வெள்ள நிவாரணமாக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடிய தரவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பணம் தரவில்லை. ஒப்புதலும் வழங்கவில்லை. பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசுதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகிறற ஜல்ஜீவன் திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 50 விழுக்காடு. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது மாநில அரசிடம் பணம் வாங்கித்தான் தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் ஒட்டிக்கிறார் என்று அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்
இன்னும் கேட்கவேண்டும் என்றால், ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் எங்கே இருந்து வருகிறது? மாநிலங்களின் வரியாக இருந்தாலும், ஒன்றிய வரியாக இருந்தாலும் மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் கொடுக்கின்ற வரிதான்! வெறும் கையால் முழம் போடுவது என்று சொல்லுவார்கள். அதுபோல, தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டு இருக்கிறார் நம்முடைய பாரதப் பிரதமர் மோடி அவர்கள். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்... இதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். மக்களான நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள். மக்களும், அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடப்பது கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்காக நடக்கின்ற ஆட்சி தான் இது! அதனால்தான் உங்கள் குடும்ப விழாவுக்கு வருகின்ற மாதிரி நீங்கள் எல்லாம் இங்கு உரிமையுடன் வந்திருக்கிறீர்கள். இதே உணர்வோடும். வளமோடும். நலமோடும் வாழ்வோம்! தமிழ்நாட்டையும் வாழ வைப்போம்! இந்தியாவுக்கும் வழிகாட்டியாக நாம் மாறுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
மீண்டும் ஒரு அதிமுக மாஜி எம்எல்ஏவை பாஜகவிற்கு தட்டி தூக்கிய அண்ணாமலை..அதிர்ச்சியில் எடப்பாடி