sslc results should be in grade method

தமிழகம், புதுசேரியில் நாளை மறுநாள் (19ம் தேதி) 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது. ஏற்கனவே கடந்த 12ம்தேதி பிளஸ் 2 முடிவுகள் வந்தது. அதில், ரேங்க் பட்டியல் வெளியிட கூடாது என பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டது. மேலும், இனி தேர்ச்சி விகிதம் கிரேடு முறைதான் என பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவு வெளியாக உள்ளது. இதையொட்டி, 'ரேங்க் அறிவிக்க கூடாது' என பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள்ளது. 

பல ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் நடைமுறையில் இருந்த, 'ரேங்க்' முறை, இந்த ஆண்டு அதிரடியாக அகற்றப்பட்டது. இதையொட்டி தனியார் பள்ளிகளும்,தங்கள் பள்ளிகளின், 'டாப்பர்ஸ்' பட்டியலை வெளியிடவில்லை.

இதை தொடர்ந்து 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை, நாளை மறுநாள் வெளியிடுகிறது. இதிலும், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் முறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சில பள்ளிகள், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர்களை, 'டாப்பர்ஸ்' ஆக அறிவிக்க, முடிவு செய்த்தாக கூறப்படுகிறது. அதற்கு, தமிழக பள்ளிக்கல்வி துறை தடை விதித்துள்ளது.

மெட்ரிக் பள்ளி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'எந்த தனியார் பள்ளியும், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறும், தங்கள் மாணவர்களுக்கு, முதல் மூன்று, 'ரேங்க்' வைத்து, அவர்களின் பட்டியலை பிரபலப்படுத்தக் கூடாது; அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.