தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக இலங்கை ஈழத் தமிழர்கள் குரல் கொடுத்துள்ள சம்பவம் தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 தொண்டர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் ஒருநபர் ஆணையம், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 8 எம்.பி.கள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
கரூர் சம்பவம் தொடர்பான பரபரப்புகள் ஒருபுறம் இருக்க தவெக தலைவர் விஜய் தன்னிலை விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நாங்கள் பிரசாரம் செய்தோம். இதில் எங்கள் தவறு ஒன்றும் இல்லை. நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டது. இதற்கு முன் 5 மாவட்டங்களில் பிரசாரம் செய்துவிட்டோம். அப்பொழுது நடைபெறாத விபத்து கரூரில் மட்டும் எப்படி நடந்தது?
மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களுக்கு அனைத்து உண்மையும் தெரியும். முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். மக்களை விட்டுவிடுங்கள்” என்று பகிரங்கமாக சவால் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் இலங்கை யாழ்பான தமிழர்கள் சார்பாக வெளியாகியுள்ள வீடியோவில், “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெற்றிகரமாகவும், மிகவும் கவனமாகவும் தனது அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். விழித்துக் கொண்ட தமிழ் மக்கள் விஜய் பின்னுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது அதிகாரத்தை கையில் வைத்திருந்த கருணாநிதி பொய்யான உண்ணாவிரத நாடகத்தை நிகழ்த்தி காட்டினார்.
ஈழ மக்களை கொலை செய்த வருத்தம் தற்போதும் தமிழ் மக்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டிருந்த விஜய் தற்போது பிரபாகரனுக்கு அடுத்தபடியான தமிழ் மக்களின் தலைவராக உருவெடுத்துள்ளார். வருங்காலத்தில் நேர்மையான விஜய்யை 2026ம் ஆண்டு தேர்தலில் அவரை தமிழக மக்கள் ஆட்சி பொறுப்பில் அமர வைப்பார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
