இராமநாதபுரம்

இலங்கை அகதிகளிடம் ரூ.1 இலட்சம் பணம் வாங்கிய படகோட்டி, தனுஷ்கோடியை இலங்கை என்று காட்டி இறக்கிவிட்டுவிட்டார். இரவு முழுவதும் உணவின்றி தவித்த அகதிகளை அங்கிருந்த மீனவர்கள் மீட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த அன்பழகன் (45), இவரது மனைவி சுதா (34) மற்றும் மகன் அஜந்தன் (15), மகள் நிஷா (13) ஆகிய நால்வரும், கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்தியா வந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர்.

இங்கு இவர்கள் பல்வேறு தொழில்கள் செய்தும் நட்டமடைந்த காரணத்தினால் சொந்த நாடான இலங்கைக்கேச் சென்றுவிட முடிவு எடுத்துள்ளனர். அதன்படி, இராமேசுவரம் தீவுப் பகுதியான சேராங்கோட்டையில் இருந்து நாட்டுப் படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

எனவே, இராமேசுவரத்தைச் சேர்ந்த படகோட்டி ஒருவரிடம் ரூ.1 இலட்சம் கொடுத்து, இலங்கையில் இறக்கி விடுமாறு கூறி வியாழக்கிழமை படகில் ஏறியுள்ளனர். ஆனால், படகோட்டி இலங்கைப் பகுதி என ஏமாற்றி, அவர்களை இராமநாதபுரம் மாவட்டம். தனுஷ்கோடி அருகேயுள்ள ஐந்தாவது மணல் தீடையில் இறக்கி விட்டுச் சென்றுவிட்டார்.

இரவு முழுவதும் உணவு, குடிநீர் எதுவுமின்றி மணல் தீடையில் சிக்கித் தவித்த இவர்களைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் மீட்டு இந்தியக் கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கடலோரக் காவல் படையினர் அவர்கள் நால்வரையும் இராமேசுவரம் கடற்கரைப் பகுதிக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து காவலாளர்கள் மற்றும் உளவுப் பிரிவு காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.