இலங்கையில் முதல்வர் ஸ்டாலின் உரைக்கு தடையா? அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!

இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசி அனுப்பிய வீடியோ ஒளிபரப்பாகாதது குறித்து அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்.

Sri lankan minister jeevan thondaman explain about cm stalin video not telecasted in srilanka smp

இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200ஆவது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, “நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தது.

இலங்கை மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடந்த ‘நாம் 200’ நிகழ்வில், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதற்காக இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக உறுதி அளித்தார்.

இலங்கையில் தேசிய நிகழ்ச்சியான, இந்நிகழ்வில் காணொலி மூலம் உரையாற்ற வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் முதல்வர் ஸ்டலினிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதனடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் தனது உரையை வீடியோவாக பதிவு செய்து அனுப்பியிருந்தார். அதில், “இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்.” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் பேசி அனுப்பிய வீடியோ நிகழ்ச்சியில் காணொலியாக ஒளிபரப்பப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  “ஸ்டாலினின் உரையை ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் அவரை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு ஐடி ரெய்டு: ரூ.10 கோடி பறிமுதல்?

இதுகுறித்து விசாரிக்கையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக பங்கேற்ற நிகழ்ச்சிக்கான நிரலை மத்திய அரசுதான் இறுதி செய்ய வேண்டும். ஆனால், தமிழக முதல்வரின் காணொலி தாமதமாகவே கிடைத்ததால் அதனை ஒளிபரப்புவதற்கான அனுமதியை வழங்க இயலவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புவில் இருந்து வெளியாகும் தி மார்னிங் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “முதலமைச்சர் ஸ்டாலினின் உரையை கடைசி நிமிடத்தில் சேர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்தது. நிகழ்வின் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், ஸ்டாலினின் உரையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் ஒளிபரப்ப முடியவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசி அனுப்பிய வீடியோ ஒளிபரப்பாகாதது குறித்து அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் வீடியோ ஒளிபரப்பாகாதற்கு நடைமுறை சிக்கல்கள் மட்டுமே காரணம்; வேறு காரணம் இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios