இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறல்..! ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைதால் பதற்றம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிக்கும், அப்போது மீனவர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து மீனவர்கள் பலியாகும் நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் மீனவர்களின் படகுகளை சிறை பிடித்து வைத்துக்கொண்டு திருப்பி கொடுக்கப்படாத நிலையானது நீடித்து வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு பறிபோனதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை அத்துமீறல்
இதனிடையே கடந்த 2 மாதமாக மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தடை காலம் முடிந்து கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி தான் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க சென்றனர். அப்போதே அடுத்தடுத்த நாட்களில் தமிழக மீனவர்கள் 30க்கும் மேற்பட்டவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது. இந்த சம்பவம் மறைவதற்குள் நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்களையும் , இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. இதன் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முக்கிய துறைகளில் அதிரடி மாற்றம் - முழு விபரம்