ஸ்ரீ தேவியை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு பார்க்கும்போது சோர்வாகத்தான் தெரிந்தார் என்றும், மிகுந்த மரியாதையான பெண்; பொறுமைசாலி என்று குழந்தை பருவத்து தோழியான குட்டிபத்மினி கூறினார்.

துபாயில் உறவினர் திருமணத்துக்கு சென்ற ஸ்ரீதேவி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரண செய்தியைக் கேட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீதேவியின் உடலை, இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் துபாய் ஓட்டல் அறையில் குளியல் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் இல்லை என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. ஸ்ரீதேவியின் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய குழந்தைப் பருவத்து தோழியான குட்டி பத்மினி, ஸ்ரீதேவி குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஸ்ரீதேவி என்னைவிட கொஞ்சம் குட்டிப்பொண்ணு. குழந்தைகளாக இருந்தபோது அவள் ரொம்பவே அம்மா செல்லம். ஷூட்டிங் இடத்தில் கொஞ்சம் கூட்டம் இருந்தாலே டென்ஷனாயிடுவாள். ஆனால் காலம் அவளை எப்போதும் ஷூட்டிங், ரசிகர்கள், பரபரப்பு, கூட்டம் என்றே வைத்து விட்டது. ஸ்ரீதேவியின் அம்மா வேறு வேலையாகப் போகும்போதெல்லாம் என் அம்மாவிடம்தான் ஸ்ரீதேவியை விட்டு விட்டுப் போவார். அம்மா உடன் இல்லாததால், தூங்கவே மாட்டாள். அம்மா பக்கத்தில் இருக்க வேண்டும். மொத்தத்தில் ஸ்ரீ ரொம்ப பயந்த குழந்தை. கொஞ்சம் வளர்ந்த பிறகும் அம்மா
துணையின்றி வெளியே போக மாட்டாள். அதனால்தான், அம்மா இறந்தபோது, இனி தனக்கு வாழ்க்கையே இல்லை என்று கொஞ்ச காலம் மனம் உடைந்து போயிருந்தாள் என்று குட்டி பத்மினி, குழந்தை பருவத்து தோழி குறித்து வேதனையோடு விவரித்தார்.

ஸ்ரீதேவி இறந்த செய்தியை டிவியில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு முன்புதான் மும்பையில் ஒரு திருமணத்தில் சந்தித்தோம். சர்ப்ரைஸ் தாங்க முடியாமல் 'ஹாய்' சொன்ன ஸ்ரீதேவி, வேறு எந்த வார்த்தையும் பேசவில்லை. அந்த நேரத்தில் மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இப்போ யோசிக்கும்போது, ஸ்ரீதேவி அன்று சோர்வாகத்தான் தெரிந்தார். ஹெல்த் பிரச்சனை இருந்திருக்கலாம். அதனால்தான் பேச முடியாமல் சென்று விட்டாரோ என்னவோ. எனக்குத் தெரிந்த ஸ்ரீதேவி ரொம்ப மரியாதையான பெண்; மிகுந்த பொறுமைசாலி என்று குட்டி பத்மினி கூறினார்.