பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் ஜூன் 28 முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளன என்றும் அதில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்துமாறும் ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "கிராமங்களில் உள்ள இளைஞர்களிடம் விளையாட்டின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு உரிய பயிற்சி, ஊக்கமளித்து, அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். 

அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட கிராம ஊராட்சிப் பள்ளிகள், சமுதாய கூடத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. 

முதல் நாள் நடைபெறும் குழுப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள், தனித்திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தங்களது பெயர், இருப்பிட விவரங்களை கிராம ஊராட்சி செயலரிடம் பதிவு செய்ய வேண்டும்.

இரண்டாம் நாள் குழுப் போட்டியும், மூன்றாம் நாள் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்படும். தடகளப் போட்டிகள் (ஆண், பெண் இருபாலருக்கும்) 100 மீ, 200 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. 

குழுப் போட்டிகள் பிரிவில் கையுந்துப் பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும், கால்பந்து போட்டியானது ஆண்களுக்கு மட்டும் நடத்தப்பட உள்ளது. தனித்திறன், குழுப் போட்டிகளில் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அவர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 2 விளையாட்டில் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்படும். ஒவ்வொரு கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருள்கள் பதக்கங்களாக வழங்கப்பட உள்ளது. 

எனவே, கிராம ஊராட்சியில் அமைந்துள்ள சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அவரவர் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த வேண்டும்" என்று அதில் கேட்டு கொண்டார்.