வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
வடகிழக்கு பருவமழை முடியும் வரை டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக முழுவதும் டெங்கு போன்ற மழைக்கால நோய் தடுப்புக்காக ஆயிரம் முகாம்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி ஆயிரம் முகாம்கள் என்பது 1300 முகாம்களாக இன்று உயர்ந்து 1300 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவையை பொறுத்த வரை 107 இடங்களில் முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சேலத்தில் 189 இடங்களிலும் மதுரையில் 129 இடங்களிலும் சென்னையிலும் திருச்சியிலும் தலா 45 இடங்களிலும் நீலகிரியில் 12 இடங்களிலும் என்று மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களால் பல்லாயிரக்கணக்கான பேர் பலன் பெற்று வருகின்றனர். டெங்கு லெப்ட்ரோ ஃபைரோஸிஸ் பைபாஸ் ப்ளூ போன்றவை உறுதி செய்யப்பட்ட இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவையை பொறுத்தவரை 107 முகாம்களில் இதுவரை 2354 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.” என்றார்.
தமிழகத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் காரணத்தினால் டெங்கு போன்ற நோய்கள் கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி நேற்று வரை 4354 பேருக்கு பாதிப்பு இருந்தது. குறிப்பாக நேற்று மட்டும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 363 பேர் என இருந்தார்கள். இந்த 363 பேரில் கோவையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். யாருக்கும் பெரிய அளவிலான உயிர் பாதிப்பு என்பது இல்லை.” என்றார்.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் முதல்வர் ஸ்டாலின் மகள் சுவாமி தரிசனம்!
தொடர் மழையால் ஆங்காங்கே நீர்த்தேக்கம். அதனால் உருவாகின்ற ஏடிஸ் கொசுக்கள் அதன் காரணமாக டெங்கு போன்றவை உருவாகின்றது. இருந்தாலும் அந்தந்த மாவட்ட ஆட்சியின் நிர்வாகங்களும், உள்ளாட்சி நிர்வாகமும் முதல்வரின் வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு அக்டோபர் வரை 454 பேர் என்கின்ற அளவில் பாதிப்பு இருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “டெங்குவை பொறுத்த வரை 2012 ஆம் ஆண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஆண்டில் 13 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு உள்ளாகி 65 பேர் மரணம் அடைந்தனர். இந்த இரண்டு ஆண்டுகள் தான் அதிகபட்ச மரணங்கள் தமிழகத்தில் பதிவானது. தொடர்ந்து மற்ற ஆண்டுகளில் ஓற்றை இலக்க பாதிப்புதான் பதிவானது. அதுவும் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த ஆண்டு இதேபோல் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் தேவைப்பட்டால் இந்த வடகிழக்கு பருவமழை முடியும் வரை இந்த முகாம்கள் நீடிக்கப்படும்.” என்றார்.