கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார முடிந்தவுடன் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யும் பணி வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. பல இடங்களில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டிருந்த ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து பெண் வாக்காளர்களுக்கு கொலுசு மற்றும் ரூ.1000 முதல் ரூ.2000 வரை பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதை அடுத்து கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தவும், பாதுகாப்பிற்கு துணை இராணுவத்தை வரவழைக்க கோரியும், அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் வெளியூர் திமுகவினரை வெளியேற்றக் கோரியும், அதிகாரிகள் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதை அடுத்து கோவையில் ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார். அதன் எதிரொலியாக கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
