சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
23/04/2024 (செவ்வாய் கிழமை) சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும் மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது