Asianet News TamilAsianet News Tamil

காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற முடியாத நீர்வளத் துறை அமைச்சர் வாய்ஜாலம் காட்டுகிறார்! எஸ்.பி.வேலுமணி!

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களான ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும்; கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதும்; கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், விடியா திமுக அரசின் எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். 

SP Velumani Slams Minister DuraiMurugan tvk
Author
First Published May 22, 2024, 4:05 PM IST | Last Updated May 22, 2024, 4:10 PM IST

திமுக அரசின் எதிர்ப்பே இல்லாமல் அண்டை மாநில தடுப்பணை பணிகள் சுதந்திரமாக நடக்கின்றன என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக ஆட்சியில் இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வரும் நிலையிலும், கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்தோடு, தமிழகத்தின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். கபட நாடகம் ஆடுதல்; இரட்டை வேடம் போடுதல்; உண்ட வீட்டிற்கே துரோகம் செய்தல்; நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்தல் போன்ற செயல்கள் ஆளும் திமுக-வினருக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: எப்படிங்க நீங்க ராகுல் காந்திய புகழ்ந்து சொல்லலாம்? செல்லூர் ராஜூவுக்கு டோஸ் விட்ட அதிமுக தலைமை?

காவிரி பிரச்சனையாகட்டும்; மேகதாது அணை கட்டும் பிரச்சனையாகட்டும்; முல்லைப் பெரியாறு பிரச்சனையாகட்டும்; பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டும் பிரச்சனையாகட்டும்; அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கும்போது அதை தட்டிக் கேட்க கையாலாகாத விடியா திமுக ஆட்சியாளர்கள், தங்கள் சுயநலத்திற்காக கைகட்டி, வாய்பொத்தி மவுனமாக வலம் வருவதை அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார்.

அதன் அடிப்படையில், கேரள அரசு தற்போது அமராவதி ஆற்றுக்கு வரும் நீரை தடுக்கும் வகையில், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை இந்த நாடகக் கும்பல் அரசு வேடிக்கை பார்ப்பதை தோலுரித்துக் காட்டினார். உடனடியாக சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினார். தங்களுடைய கள்ளத்தன நடவடிக்கைகளை மக்கள் முன்பு எதிர்க்கட்சித் தலைவரால் தோலுரித்துக் காட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாத நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், வழக்கம்போல் பசப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிக்கை என்ற பெயரில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி; அதில் பொதுப்பணித் துறை மந்திரியாக இருந்தவரும் இவரே. ஒன்றிய அரசு-குன்றிய அரசு என்று வாய்ஜாலம் காட்டும் விடியா திமுக-வும், காங்கிரஸ் கட்சியும் அப்போது மத்தியில் கூட்டாக ஆண்டது. அப்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 2G ஸ்பெக்டரம் ஊழலில் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஊழல் செய்வதில் கவனம் செலுத்தி, தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்துவிட்டு, இன்று பகல் வேஷம் போடும் விடியா திமுக-வைப் பார்த்து மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா 2011-ல் ஆட்சிக்கு வந்த பின்பு, நெஞ்சுரத்துடன் சட்டப் போராட்டம் நடத்தியதன் காரணமாக, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 19.2.2013 அன்று செயலாக்கத்திற்கு வந்தது. அதற்காக தஞ்சையில், அனைத்து விவசாயிகள் சார்பில் மாபெரும் விழா எடுக்கப்பட்டு, எங்கள் அம்மாவுக்கு ‘பொன்னியின் செல்வி' என்ற பட்டம் வழங்கப்பட்டதை தமிழக மக்கள் மறக்கவில்லை.

அம்மாவின் அரசு பல சட்டப் போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றத்தில் 16.2.2018-ல் இறுதி ஆணையைப் பெற்று, அதன் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது. அதன் அடிப்படையில், 2023-ல் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெறமுடியாத கையாலாகாத விடியா திமுக அரசின் நீர்வளத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் வாய்ஜாலம் காட்டி உள்ளார். வார்த்தை ஜாலங்களில் கில்லாடிகளான விடியா திமுக அரசின் மந்திரிகளில், தலையாய மந்திரியான துரைமுருகன் அவர்கள், சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சனை முதல், காவிரிப் பிரச்சனை வரை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடுவோம் என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களான ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும்; கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதும்; கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், விடியா திமுக அரசின் எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். தற்போது கேரளாவில் நடப்பது திமுக-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. இச்செய்திகளின் அடிப்படையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதையும் படிங்க:  அமைச்சரவையை மாற்ற திட்டமிடும் ஸ்டாலின்.? மாற்றப்படுபவர்கள் யார்.? புதிய அமைச்சர்கள் யாருக்கு வாய்ப்பு.?

தங்கள் குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த 'நாடக மாடல் விடியா திமுக அரசு' கைவிட வேண்டும். காவிரி நீர் பிரச்சனை குறித்து ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சட்ட ரீதியான போராட்டம் நடத்தியும், தேர்தல் கூட்டணி அமைத்துள்ள அண்டை மாநில ஆட்சியளர்களிடமும் வற்புறுத்தியும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். அடுத்தவர்கள் மீது வீண் பழி சுமத்தி, தங்களை புனிதமானவர்களாகக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை விடியா திமுக ஆட்சியாளர்கள் கைவிட்டு, பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சட்டத்தின் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios