Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்கள் யாரிடமும் கையேந்த கூடாது என்று சிந்தித்து செயல்பட்டவர் ஜெயலலிதா – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு….

sp velumani praised jayalalitha in new college open
sp velumani praised jayalalitha in new college open in kovai
Author
First Published Aug 7, 2017, 8:49 AM IST


கோயம்புத்தூர்

தமிழக மக்கள் யாரிடமும் கையேந்த கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தோடு தொலைநோக்குப் பார்வையுடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிந்தித்தார் என்று அரசு கல்லூரி தொடக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோயம்புத்தூரை அடுத்த தொண்டாமுத்தூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அரிகரன் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அ.கணபதி முன்னிலை வகித்துப் பேசினார்.

இந்த விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியது:

“தமிழக மக்கள் யாரிடமும் கையேந்த கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தோடு தொலைநோக்குப் பார்வையுடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிந்தித்தார்.

உலகத்தரம் வாய்ந்த கல்வியை கற்றால்தான் நவீன அறிவியல் உலகத்தில் போட்டியிட்டு தமிழகத்தைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்ல இயலும் என்று நினைத்து அவர் பல்வேறு திட்டங்களைத் தீட்டினார்.

மேலும், சராசரி மனிதரின் ஆண்டு வருமானம் 4½ இலட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும். இல்லாமை இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு அவர் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி கல்வித்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.

கொங்கு மண்டல மக்களின் மீது மிகுந்த பாசம் கொண்டு இதுவரை இல்லாத வகையில் முத்தான திட்டங்களை ஜெயலலிதா தந்துள்ளார். ரூ.1500 கோடி மதிப்பில் உலகத் தரத்திற்கு இணையாக கோவை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி, ரூ.825 கோடி மதிப்பில் மேட்டுப்பாளையம் முதல் சாய்பாபா காலனி வரை நான்கு வழிச்சாலை, ரூ.900 கோடி மதிப்பில் இலட்சுமி மில்ஸ் சந்திப்பு முதல் சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம்,

ரூ.500 கோடி மதிப்பில் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலை, ரூ.320 கோடி மதிப்பில் மேற்கு புறவழிச்சாலை உள்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய கல்லூரிகள், புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கி, புதிய ஆசிரியர்கள் நியமனம் என அனைத்து தரப்பு மக்களுக்கும் உயர்கல்வி கிடைக்க ஜெயலலிதா வழிவகை செய்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ரூ.1 இலட்சத்து 8 ஆயிரத்து 697 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பள்ளி கல்வியை செழித்தோங்கி வளரச்செய்து கிராமப்புற ஏழை மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் சிறந்த கல்வியை தந்து கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தியவர் அவர்.

தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவினாசி – அத்திக்கடவு திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கினார். தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் மூலம் அனைத்து குளங்களும், கால்வாய்களும் தூர் வாரப்பட்டது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2247 கோடியில் இடுபொருள் மானியம் மற்றும் வறட்சி நிவாரணம், அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. தமிழக நலன் காக்கும் திட்டங்கள், அரசு கொள்கை முடிவுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கையாக ஆயிரத்து 969 கையெழுத்து போடப்பட்டு, தமிழக நலனுக்காக பல்வேறு சாதனை திட்டங்களை வழங்கியுள்ளார்.

கடந்த ஓராண்டில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் அன்னைதெரசா மகளிர் கல்லூரியும், மேட்டுப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் 70 ஆண்டுகால எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்திடும் வகையில் இருபாலர் பயிலும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட கோவை மாவட்டத்திற்கு மட்டும் 4 கல்லூரிகள் மற்றும் பல்லடம் பகுதியில் ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வி ஆண்டில் இந்த கல்லூரியானது புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு கூடுதல் பாடப்பிரிவுகளை சேர்த்து, இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கல்லூரி படிப்பை முடித்த பின்பு மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளில் பணியாற்றவும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ். ஆகிய தேர்வுகளை எழுத வேண்டும். இதற்காக பங்கேற்கவும் மற்றும் தலைமை பண்புகளில் சிறந்த பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்க அரசு சார்பில் புதிய பயிற்சி மையத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளில் கோவையில் தொடங்கப்பட உள்ளது.

அந்த பயிற்சி மையத்தை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

அதைத் தொடர்ந்து புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைச் சான்று, வேளாண்மைத் துறையின் மூலம் தென்னை மறுநடவு மற்றும் புத்துணர்வு திட்டத்தின் கீழ் மானியம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்த விழாவில், சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு, மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, மாவட்ட வருவாய் அதிகாரி துரை.ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ்,

கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பெருமாள், தமிழ்நாடு வக்ப வாரிய தலைவர் சி.டி.சி. அப்துல் ஜப்பார், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் ஆர்.சந்திரசேகர்,

முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராஜு, விஷ்ணுபிரபு மற்றும் செயல் அலுவலர்கள் சசிகலா (பேரூர்), இரா.சுந்தரம் (தொண்டாமுத்தூர்), எம்.ஆர்.சரஸ்வதி (ஆலாந்துறை), புவனேஸ்வரி (தாளியூர்) மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், மக்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios