தொடரும் கூட்ட நெரிசல்... சென்னைக்கு திரும்ப நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் 5 நாட்கள் விடுமுறை இன்றோடு முடிவடைவதையடுத்து பயணிகள் சென்னை திரும்பும் வகையில், நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை-தொடர் விடுமுறை
பொங்கல் பண்டிகையொட்டி தொடர் விடுமுறையின் காரணமாக தங்களது சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையானது இன்றோடு முடிவடைகிறது நாளை முதல் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வந்ததால் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள், பேருந்துகள் மூலமாக 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் வெளியூருக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நாளை மீண்டும் வழக்கமான பணி தொடங்குவதால் மீண்டும் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டமானது நிரம்பி வழிகிறது.
நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்
இதனையடுத்து பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக நாகர்கோவில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயிலானது ( ரயில் எண் 06128/ 06127) நாகர்கோவில் இருந்து இன்று மாலை 4:30 மணிக்கு புறப்படுகிறது இந்த ரயில் தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.10 மணியளவில் வந்து சேருகிறது. மேலும் இந்த ரயில் நாளை காலை 8 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
சிறப்பு ரயில் சேவை
இந்த ரயிலில் 11 ஏசி பெட்டிகளும் ஐந்து முன்பதிவு பெட்டிகளும் இரண்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 4:30 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவானது தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்