ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

கேரளா மாநிலத்தில் சாதி, மதம் பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களாலும் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக திகழும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடைத் திருநாள் என அழைக்கிறார்கள்.

மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாக கேரள மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான ஓண சாத்யா என்ற உணவு தயாரித்து உற்றார், உறவினர்களுக்கு அளித்து ஓனம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை முதல் சிறப்பு முகாம்!

இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு ரயிலானது, ஆகஸ்ட் 26ஆம் தேதி தாம்பரத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு 11.40க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45க்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 18ஆம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் துவங்க உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்னதாக, ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய பொருட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.