தென் மாவட்டங்கள் பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ரூ.208 நிவாரணத் தொகை - அமைச்சர் அறிவிப்பு!
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு விவசாயிகளுக்கு ரூ.208 நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நேற்று தாக்கல் செய்த நிலையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-25 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். 4ஆவது ஆண்டாக தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அதன்படி, பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளுடன் தனது வேளாண் பட்ஜெட்டை உரையை தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ரூ. 380.40 கோடி நிவாரணத்தொகை 4.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், கடந்த டிசம்பரில் தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் இதற்காக ரூ.208 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது: “பருவநிலை மாற்றத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஆண்டுதோறும் நேரிட்டு பயிர் உற்பத்தியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கின்றன. இத்தகைய இயற்கை இடர்ப்பாடுகளினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட, 25 இலட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 4,436 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் விதைப்பு பொய்த்தல் இனத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 2022-2023, 2023-2024-ஆம் ஆண்டுகளில் பயிர் இழப்பு ஏற்பட்ட அதே ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில், கடந்த 2022-2023-ஆம் ஆண்டில், தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, மாண்டஸ் புயல், வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, பருவம் தவறிப் பெய்த மழை, வறட்சி, கடந்த மார்ச் 2023-இல் பெய்த ஆலங்கட்டி மழை ஆகிய இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்கு, 380 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 4 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.
“குறுவைப் (காரீஃப்) பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்பு, மிக்ஜாம் புயல், மக்காச்சோளப்பயிரில் ஏற்பட்ட மகசூல் இழப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 85 ஆயிரம் விவசாயிகளுக்கு 118 கோடியே 77 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கோடை மழை, தென்காசி மாவட்டத்தில் தென் மேற்குப் பருவமழை காலத்தில் மழை குறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 இலட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.” என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
மேட்டூர் அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தபோதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் அரிய நிகழ்வாக மேட்டூர் மேட்டூர் அணையிலிருந்து 03.02.2024 அன்று டெல்டா பாசனத்திற்காக 3 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதால், பாதிக்கும் நிலையிலிருந்த சுமார் 25,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், பூச்சிநோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்; சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்தார்.