Tamil Nadu Agriculture Budget 2024 சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும்: வேளாண் பட்ஜெட்டில் அ
சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 22ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை தனித்தனியாக தாக்கல் செய்யப்படுகின்றன.
அதன்படி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பச்சைத்துண்டு அணிந்து 2024-25 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். நுண்ணீர் பாசனங்க, வேளாண் இயந்திரங்களுக்க் கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நடப்பாண்டில் மேலும் 50000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். அரசு தோட்டகலை பண்ணைகளில் நடவு செடிகள் விற்பனை மையம் அமைக்கப்படும் எனவும், 116 மெட்ரிக் டன்னாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் மொத்த சாகுபடி 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டு 45 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், 2 லட்சம் விவசாயிகள் பயனடைய 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
நிரந்தர மண்புழு உரத்தொட்டிகள, உரப்படுக்கைகள் அமைக்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும் எனவும், 1000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Tamil Nadu Agriculture Budget 2024 live updates
வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டுசேர்ப்பது முக்கியம் என்ற அவர், விவசாயிகளின் நலனை பேணிக் காத்திட பல அரிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன என்றார். தமிழ்ச் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது எனவும் அவர் கூறினார்.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பை தடுக்க ஏதுவாக கிடங்குகள் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.