தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளார். வெளி மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக கூறி தமிழகம் முழுவதும் பலரை ஏமாற்றி உள்ளார்.

சென்னையில் பெண் ஒருவரிடம் 35 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்த இவர் மீது தர்மபுரியில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவையில் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. வளசரவாக்கத்தை சேர்ந்த நெல்சன் என்பவரும் ராஜேஸ்வரனிடம் ரூ.20 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். மொத்தம் ரூ.20 கோடியை இவர் சுருட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஜனவரி மாதம் ராஜேஸ்வரனை கைது செய்தனர்.

கூடுதல் கமி‌ஷனர் கணேசமூர்த்தி மேற்பார்வையில் துணை கமி‌ஷனர் செந்தில் குமார், உதவி ஆணையர்கள் முத்துவேல்பாண்டி, சச்சிதானந்தம் ஆகியோர் மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.

ராஜேஸ்வரனை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் சுமதி பரிந்துரை செய்தார். இதனை ஏற்று கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் சொத்து அபேஸ் பண்ண முயன்ற டுபாக்கூர் சாமியார்! 

திருச்சி மாவட்டம் சிவராஜயோக ஆசிரமத்தில் சாமியாராக இருப்பவர் ரிஷி யோகி. இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர், தன்னிடம் ஆசை வார்த்தை கூறி, சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார் என்று புகார் அளித்து இருந்தார். 

இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் தன்னிடம் வழிபாட்டுக்காக வந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் இருந்து 50 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாமியார் ரிஷி யோகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.