பெரம்பலூர்

வன விலங்குகள் தொல்லையில் இருந்தும், பயிர்களை சேதப்படுவதை காப்பாற்றவும் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் மின் வேலியை வன விலங்குகள் வசிக்கும் பகுதிகளில் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

பெரம்பலூர் ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளும், விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், "விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் தினமான இன்று (அதாவது நேற்று) அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. இதனால், விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு பெரும்பாலான அதிகாரிகள் வரவில்லை. 

விவசாயிகள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணமுடியாத நிலை உள்ளது. வேறொரு நாளில் விளையாட்டு போட்டியை நடத்தி, விவசாயிகளின் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கலாம். 

மேலும், நீர் நிலைகளை கோடைகாலத்தில் தூர் வாரி தண்ணீரை சேமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள மண் வளங்கள், மலடாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு மண் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வன விலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. குரங்கு, மான், மயில், காட்டுப் பன்றி ஆகியவை பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். 

இந்த சேதத்திலிருந்து பயிர்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற சூரிய ஒளியில் இயங்கும் சோலார் மின் வேலியை வன விலங்குகள் வசிக்கும் பகுதிகளில் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துங்கபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டும். விவசாய மின் இணைப்புகளை நிர்ணயிக்கப்பட்ட இலக்கீட்டின்படி இணைப்பு வழங்க வேண்டும்.

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகைக்கு விவசாய இயந்திரங்கள் கிடைக்கும் இடம் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.