Soil erosion on coastal beach Collector Industry Minister research
கடலூர்
கடல் சீற்றத்தால் தாழங்குடா கடற்கரையில் அதிகளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூர் அடுத்துள்ள தாழங்குடா கடற்கரையில் அதிகளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரையோரத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. மீன் ஏலம் விடும் தலமும், கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகளும் சேதமடைந்தன.
இப்படி தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் மீனவர்கள், "தங்களது படகுகளை நிறுத்துவதற்கு அரசு தனி இடம் அமைத்து தரவேண்டும்.
கடல் அரிப்பு ஏற்படாமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தி கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தாழங்குடா பகுதியை கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தென்பெண்ணையாற்றின் முகத்துவாரத்தில் படிந்துள்ள மணல் மேடுகளையும் அவர் பார்வையிட்டார்.
இதில், கடலூர் நகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், நகராட்சி பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் தங்கதுரை, தாசில்தார் பாலமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குர்ஷித்பேகம்,
சாரதி, நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்செல்வன், கந்தன் மற்றும் கிராம தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "மத்திய அரசு மூலம் திட்ட வரையரை தயாரிக்கப்பட்டு பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடைத்த பின்னர் தாழங்குடா கடலோர கிராமத்தின் கடலோர பகுதியில் கருங்கற்களை கொட்டி தண்ணீர் ஊருக்குள் புகாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வார மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பணி பிப்ரவரி 5-ஆம் தேதி (அதாவது இன்று) முதல் மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.
