கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் உள்ள கோவிலில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு திருட்டு போன ஐம்பொன் இசக்கியம்மன் சிலை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. இது குறித்தும் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தென் தாமரைகுளம் அருகே கோவில் விளையில் ஊருக்கு ஒதுக்குபுறமாக தோட்டம் ஒன்று உள்ளது. அங்குள்ள புதரில் ஏதோவொரு பொருள் கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.

புதரை அகற்றிவிட்டு அந்த பொருள் என்னவென்று அவர்கள் பார்த்தபோது, அது அம்மன் சிலை என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சிலை ஒன்றரை அடி உயரம் இருந்தது. இதனையடுத்து சிலையை வெளியே எடுத்து சுத்தம் செய்து பார்த்தபோது அது ஐம்பொன் சிலை என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து தெரியவந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அந்தப் பகுதியில் திரண்டனர். பின்னர், இந்த தகவல் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

காவலாளர்கள் முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில். "அந்த சிலை, ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிலில் இருந்து கொள்ளைபோன இசக்கியம்மன் சிலை என்பது தெரியவந்தது. 

கோவில்விளையில் காட்டுப்பகுதியில் இசக்கியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில்தான் அந்த சிலை இருந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து இசக்கியம்மன் சிலையும், சில பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். 

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவலாளர்கள் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

கோவிலில் இருந்து தூக்கிச் செல்லும்போது இந்தச் சிலை இங்கு தவறி விழுந்திருப்பதை கொள்ளையர்கள் கவனித்து இருக்க மாட்டார்கள். நீண்ட நாள்களாக அந்த சிலை புதரின் உள்ளேயே கிடந்ததால், அதன் மீது மண், தூசி படிந்து நிறம் மாறியுள்ளது. 

இந்த நிலையில், அந்த வழியாக சென்றவர்களின் கண்ணி இந்த சிலை தென்பட்டுள்ளது. கோவிலில் இருந்து சிலையை கொள்ளையடித்து புதருக்குள் போட்டுச் சென்ற மர்ம நபர்களை காவலாளர்கள் இன்னமும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.