Six male peacocks dead in the agricultural land

கரூர்

கரூரில் விவசாய நிலத்தில் ஆறு ஆண் மயில்கள் மர்மான முறையில் செத்துக் கிடந்தன. எப்படி மயில்கள் இறந்தது என்பதை தெரிந்துகொள்ள மயில்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கொளாந்தா கௌண்டனூர் பகுதியில் செந்தில் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. விவசாயம் எதுவும் செய்யப்படமால் உள்ள அந்த நிலத்தில் நேற்று காலை ஆறு மயில்கள் செத்துக் கிடந்தன.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்ததும் கோட்ட வன அலுவலர் அன்பு உத்தரவின் பேரில் வனச்சரகர்கள் அள்ளிராஜ், சந்திரன் மேற்பார்வையில் வனவர்கள் ரமேஷ், ராஜா ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். மேலும் ஆங்காங்கே செத்துக் கிடந்த ஆறு ஆண் மயில்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

மயில்களை கொளந்தா கௌவுண்டனூரில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டுச் சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ஆறு மயில்களையும் உடற்கூராய்வு செய்தனர்.

உடற்கூராய்வின் அறிக்கை வெளிவர ஒரு வார காலமாகும் என்பதாலும், அதன்பிறகே மயில்கள் எப்படி இறந்தது? என உறுதியாக சொல்லமுடியும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

விஷம் கலந்த உணவைத் தின்றதால் மயில்கள் இறந்தனவா? விவசாய நிலங்களில் பயிர்களை மயில்கள் சேதப்படுத்தியதால் மர்ம நபர்கள் யாரேனும் மயில்களுக்கு விஷம் வைத்தனரா? என்று சந்தேகப்பட்டு வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

உடற்கூராய்வு முடிந்ததும் ஆறு ஆண் மயில்களும் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டன.