சென்னை, கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு சிலை நிறுவப்பட்டது.

நிறுவப்பட்ட இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என கூறி அகற்ற முடிவு செய்யப்பட்டது.

சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்றும் சிவாஜி சமூகநல பேரவை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிலையை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, கடந்த 2 ஆம் தேதி இரவு 12 மணியளவில், கடற்கரை சாலையில் இருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது.

சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கு அரசியல் கட்சியினர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். காமராஜர் சிலை அருகே, சிவாஜி சிலை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை, கடற்கரை சாலையில் மீண்டும் நிறுவ வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது.