sivaji ganesan memorial opening function
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவாக சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவாக தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மெரினாவில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை இந்த மணிமண்டபத்திற்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் 2,124 சதுர அடி பரப்பளவில் ரூ.2.80 கோடி செலவில் அரசு சார்பில் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சிவாஜி கணேசனின் பிறந்தநாளான இன்று சிவாஜி கணேசனின் மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதல்வர் கலந்துகொண்டு சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை திறந்துவைத்தார். அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார்.
சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைத்து துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, பேரன் விக்ரம் பிரபு ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், விஜயகுமார், ராஜேஷ், சரத்குமார், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
