Sit at home and put the AIADMK regime question to panneerselvam
அதிமுகவை வீட்டுக்கு அனுப்பிட்டு யாரை ஆட்சியில் உட்கார வைக்கப் போகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று நறுக்கென்று கேள்வி கேட்டார் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக ஒன்றிய, நகர மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் காரமடை அண்ணா திடலில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி தலைமை வகித்தார். சுப்பிரமணியம், கிருஷ்ணன், கந்தசாமி, மனோகரன், முத்துராமலிங்கபாண்டி, சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி வரவேற்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி பேசியது:
“ஜெயலலிதா விட்டுச் சென்ற இந்த இயக்கத்தை, அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க வேண்டியது தொண்டர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை.
ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப் பட வேண்டும் என்பதற்காக தான் எம்.ஜி.ஆர். அதிமுக-வைத் தொடங்கினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக 60 நாட்கள் ஆட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், அப்போது ஏன் விசாரணை ஆணையம் வேண்டும் என்று கூறவில்லை. மு.க.ஸ்டாலினும் இதையே கூறுகிறார். உங்களுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம்.
மத்திய மந்திரி வெங்கையா நாயுடு எந்தவித தவறும் நடக்கவில்லை என்று கூறுகிறார். ஒருசிலர் வேண்டும் என்றே தவறான தகவலை பரப்பி வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பொய்யான தகவலை கூறுவார்களா?
ஜெயலலிதா, தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கூறிய பிறகு, யாராவது வெளியிடுவார்களா?
நமது கட்சியைச் சேர்ந்த ஒருசிலர் திமுக-வினரிடம் சிக்கிக் கொ்ண்டுள்ளனர். அதிமுக ஆட்சி தொடர்ந்திட நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும்.
அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி விட்டு வேறு யாரை ஆட்சியில் அமர்த்த போகிறீர்கள்? இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூற வேண்டும்” என்று அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை கழக பேச்சாளர் ஈரோடு ஏ.சுப்பிரமணியம் உள்பட பலர் பேசினார்கள்.
இந்தக் கூட்டத்தில் மணிமேகலை, மகேந்திரன், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதி சேட், சாரமேடு பெருமாள், துரைசாமி, ரமேஷ், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்முடிவில் பி.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாஸ்கர் தலைமையிலான கலைத்தாய் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
