வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி கடந்த 100 நாட்களுக்கு மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு சீக்கிய குருத்வாராவைச் சேர்ந்த சீக்கியர்கள் உணவு அளித்து உதவி செய்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள ‘பங்ளா சாஹிப் குருத்வாரா’ அமைப்பைச் சேர்ந்த சீக்கியர்களே தமிழக விவசாயிகளுக்கு நாள்தோறும் சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், சாதம், உள்ளிட்ட உணவுகளை இலவசமாக அளித்து அவர்களின் பசியை போக்கி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் வெறும் வயிறுடன், பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த உணவை சமைத்து சீக்கியர்கள் எடுத்து வருகின்றனர்.

இது குறித்து டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவின் தலைவர் மன்ஜித்சிங் கூறியதாவது-

 டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இவர்களின் பசியைத் தீர்க்கும் வகையில், நாள்தோறும் உணவு அளித்து வருகிறோம்.

எங்களிடம் தமிழக விவசாயிகள் உணவு கேட்டவில்லை என்றபோதிலும், போராடுபவர்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த உணவை அளிக்கிறோம். நாங்கள் யாரையும் பிரித்துப்பார்க்கவில்லை.

எங்களுக்கும் இங்கு போராட்டத்துக்கும் தொடர்பும் இல்லை. நாங்கள் பசியோடு இருப்பவர்களுக்கு உதவுகிறோம். தொடக்கத்தில் சப்பாத்தி,பருப்பு, காய்கறிகள் அளித்தோம், தமிழர்கள் அரிசி சாதத்தை விரும்புவார்கள் என்பதால், இப்போது அரிசி சாதத்தையும் சேர்த்து தருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர் ஆர்.பெருமாள் கூறுகையில், “ எங்களுக்கு உணவு அளிக்கும் சீக்கியர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். கடவுள்தான் இவர்களை அனுப்பி இருக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.