சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி பகுதி செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் கடைகளுக்கு பிஸ்கட், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை விநியோகிக்கும் வேலையைச் செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா, செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். அப்பகுதியிலுள்ள வயதான நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கஜேந்திரன் தனது வீட்டில் புதிதாகக் கழிவறை கட்டி வருகிறார். இதன் மேற்கூரை, பக்கத்து வீட்டின் பின்பக்கக் கதவைத் திறக்க முடியாதபடி அமைந்துள்ளது. இதை எடுக்குமாறு, அந்த வீட்டில் வசித்துவரும் அமிர்தவள்ளி கூறினார். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, அமிர்தவள்ளி ரேணுகா மீது போலீசில் புகார் அளித்தார். அமிர்தவள்ளி அளித்த புகாரின்பேரில் இரு தரப்பினரையும் திருவேற்காடு போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அதிமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் மகேந்திரன் மற்றும் கவுன்சிலரின் பேச்சை கேட்டு கொண்டு அமிர்தவள்ளிக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.

மீண்டும் போலீசார் ரேணுகாவின் கணவரை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தபோது, வெளியே நின்று கொண்டிருந்த ரேணுகா போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறினார். திடீரென்று, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

போலீசார் ஓடிவந்து தீயை அணைத்தனர். அதற்குள் ரேணுகாவின் உடல் முழுவதும் தீக்காயம் பரவி, அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் ரேணுகா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். போலீசார் அமிர்தவள்ளி குடும்பத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால்தான், ரேணுகா தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மரண வாக்குமூலம்...

தற்கொலை செய்து கொண்ட ரேணுகா இறப்பதற்கு முன் தனது தந்தையுடன் அவர் செல்போனில்  பேசியிருக்கிறார். அதில், கவுன்சிலர், சேர்மேன் ஆகியோரிடம் ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் பணத்தை வாங்கிக் கொண்டு என்னை மிரட்டினர். மேலும் என்னை விபசார வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டினர். நான் என்ன விபச்சாரமா?  பெண் ஒருவர் காவல் நிலையத்தின் முன்பு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரூம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.