நாகப்பட்டினம்

டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் திட்டமான பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைக்கும் உத்தரவை மத்திய - மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் என்று அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு உள்பட்ட 45 கிராமங்களில் பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைப்பதாக மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இதில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுகா அகரவட்டாரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், இராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், பெருந்தோட்டம், அகரபெருந்தோட்டம், திருவெண்காடு, மணிகிராமம், மேலையூர், திருமயிலாடி, மாதானம், கூத்தியம்பேட்டை உள்ளிட்ட 20 கிராமங்களில் பெட்ரோல் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோலிய இரசாயன மண்டலம் செயல்படுத்தப்பட்டால், இன்னும் சில ஆண்டுகளில் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும். இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் பெரும் வேதனையுடன் இருக்கின்றனர்.

மேலும், இந்தத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பெட்ரோலிய இரசாயன மண்டலத்திற்கு எதிராக பூம்புகார் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, “சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் திட்டமான பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைக்கும் உத்தரவை மத்திய - மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும்.

அதற்கு பதிலாக காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளைநிலங்கள் மற்றும் நிலத்தடிநீரை பாதிக்கும் ஐட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களை தடை செய்ய வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.