Should I Fight Government Employees with Officials? GK Vasanthan condemned to Chief Minister ...
திருவாரூர்
அரசு ஊழியர், ஆசிரியர் நடத்தி வரும் வேலை நிறுத்தத்தை சுமுகமாக முடிக்கமல் நோட்டீஸ் அனுப்புவது, அதிகாரிகளைக் கொண்டு மிரட்டுவதை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும் என்று திருவாரூரில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்க வந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. எனவே தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கடுமையான வறட்சி நிலவுவதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பு அணைக் கட்டி நீரைச் சேமிக்க வேண்டும்.
ஆறு, குளம், வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
மழை வெள்ளப் பாதிப்புகளை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுத்திட வேண்டும்.
அரசு ஊழியர், ஆசிரியர் நடத்தி வரும் வேலை நிறுத்தத்தை சுமுகமாக முடித்திட முதலமைச்சர் உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதைவிட்டு நோட்டீஸ் அனுப்புவது, அதிகாரிகளைக் கொண்டு மிரட்டுவதை தவிர்க்க வேண்டும்.
த.மா.கா சார்பில் நீட் தேர்விற்காக பயிற்சி மையத்தை முதன் முதலில் திருச்செங்கோட்டில் தொடங்கிவுள்ளோம். இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தனித் தன்மையுடன் மக்களைச் சந்திப்போம். தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிற வகையில் நடந்துக் கொள்வோம்” என்று அவர் தெரிவித்தார்.
