சென்னை எழும்பூரில் நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் திருடிய பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சூப்பர் மார்க்கெட் கடையில் ஊழியர்களை அடித்து உதைத்த கணவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்னதாக சென்னை எழும்பூரில் அமைந்துள்ள நீல்கிரீஸ் என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு, பொருட்களை வாங்குவது போல பெண் காவலர் ஒருவர் சென்றுள்ளார். உள்ளே நுழைந்தது முதல் நீண்ட நேரமாக செல்போன் பேசிக் கொண்டே வலம் வந்த அவர் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் காவலரை கண்காணிக்க தொடங்கினர். செல்போனில் பேசுவது போன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சாக்லெட்டுகளை எடுத்து சட்டை பைக்குள் ஒளித்து வைப்பதை ஊழியர் ஒருவர் பார்த்தார். உடனே கடை உரிமையாளரிடம் தெரிவித்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு பில் போடும் இடத்திற்கு வந்த காவலர், கையில் கொண்டு வந்த 2 பொருட்களுக்கு மட்டும் பில் போடும்படி கூறியுள்ளார். அப்போது, அங்கிருந்த கடை உரிமையாளர் பிரனாவ், பாக்கெட்டில் இருப்பதையும் எடுத்து பில் போடுங்கள் என கூறியுள்ளார். ஆனால் காவலர் பாக்கெட்டில் பொருட்கள் இல்லை என்று சாதித்தார். உடனே பெண் ஊழியர் ஒருவர் அவரை சோதனை செய்தார். 

அப்போது காவலர் பாக்கெட்டில் இருந்து 5 ஸ்டார் சாக்லெட், ஜெம்ஸ் சாக்லெட், பார் ஒன் சாக்லெட், ஓடோமஸ் போன்றவற்றை பெண் காவலர் திருடி வைத்திருப்பது தெரியவந்தது. அதன் பிறகும் தாம் திருடவில்லை திட்டவட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை காண்பித்த போது திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பினார். 

காவலர் கடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே, அவருடைய கணவர் தனது 2 நண்பர்களுடன் கடைக்குள் புகுந்து ஊழியர்களை ஆபாச வார்த்தையால் திட்டினார். பின்பு கடை உரிமையாளரை கடுமையாக தாக்கினர். இதனையடுத்து போலீஸ் புகார் அளித்தார். இதுதொடர்பாக எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் திருடியவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் நந்தினி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலரின் கணவர் கணேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மக்களை காக்கும் காவல்துறையே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வருந்ததக்கது.