சென்னையில் பிரபல குளிர்பான பாட்டிலில் கண்ணாடித் துண்டுகள் இருந்ததால் சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாட்டிலை வாங்கிய தாயார், நிறுவனத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

குளிர்பான பாட்டிலில் கண்ணாடித் துண்டுகள் இருந்ததால், சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஜனவி சங்வி என்ற பெண், கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ஒரு பிரபலமான குளிர்பானக் கடையில் இருந்து கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டிற்குக் கொண்டுவந்து அந்த சீல் செய்யப்பட்ட பாட்டிலைத் திறந்தபோது, அதனுள் கண்ணாடித் துண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது மகள், அந்த கண்ணாடித் துண்டுகளை ஐஸ் கட்டி என்று நினைத்து வாயில் போட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, உடனடியாக அது கண்ணாடி என்று உணர்ந்து துப்பிவிட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். மறுநாள், சிறுமிக்கு வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஜனவி சங்வி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, ஆரம்பத்தில் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும் எந்தவொரு தகவலும் இல்லை. சிங்வியின் அழைப்புகளுக்கும் மின்னஞ்சல்களுக்கும் நிறுவனம் பதிலளிக்கவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பியபோது, "மாதத்திற்கு 2.5 கோடி பாட்டில்களை உற்பத்தி செய்கிறோம். இது போன்ற ஒரு சம்பவம் எங்கள் பிராண்டைப் பாதிக்காது" என்று நிறுவனம் அலட்சியமாகப் பதிலளித்ததாக ஜனவி சங்வி தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் இந்த அலட்சியமான பதில் குறித்து ஜனவி சங்வி தனது லிங்க்ட்இன் பக்கத்தில் விரிவான பதிவைப் பகிர்ந்துள்ளார். மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் நிறுவனம் அக்கறையின்றி இருப்பதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனவி சங்வியின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். நுகர்வோர் பாதுகாப்பிற்கு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.