ஷிவ் நாடார்’, ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். இவர் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான’  HCL நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி மற்றும் ‘ஷிவ் நாடார் அறக்கட்டளையின்’ தலைவர்.

சாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக வளர்ச்சியடைந்துள்ள ஷிவ் நாடார் கடந்த 1945 ஆம் ஆண்டு  ஜூலை 14 ஆம் தேதி  தூத்துக்குடி மாவட்டம் மூலைப்பொழி என்ற கிராமத்தில் பிறந்தார்.

கும்பகோணத்தில் தன்னுடைய ஆரம்பக் கல்வி படிப்பை தொடங்கிய ஷிவ் நாடார், மதுரையில் உள்ள மாநாகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியிலும், அமெரிக்கன் கல்லூரியில் தனது உயர்கல்விப் படிப்பையும் முடித்தார்.

பின்னர்  கோயமுத்தூரிலுள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, டெல்லிக்கு சென்ற அவர், அங்கு டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், ஷிவ் நாடார் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இதையடுத்து,  ஷிவ் நாடார் தன்னுடைய எச்.சி.எல் நிறுவனத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார்.


 
1982 ஆம் ஆண்டு, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், எச்.சி.எல் கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்களின் வருவாய் 80 சதவீதம் பெருகியுள்ளது.
 
தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொது பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை அவர் செய்துவருகிறார் ஷிவ் நாடார். கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷிவ் நாடார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார்.

ஷிவ் நாடார் கடந்த ஆண்டில் மட்டும் 630 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். நாட்டிலேயே நன்கொடை வழங்கியவர்களில் ஷிவ் நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார். 73 ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்டுள்ள அவர் நாட்டின் பெரும் பணக்காரர்களில் 5வது இடத்தை பிடித்துள்ளார். 


இந்நிலையில் ஷிவ் நாடார், மதுரையில் தான் படித்த மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காக 15 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இதையடுத்து அந்தப் பள்ளியில் இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டு அதில் 26 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட கணினிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் என அந்தப் பள்ளி தற்போது ஜொலிக்கிறது. பிறந்த ஊரையும், படித்த பள்ளியையும் பேணிப் போற்றும் ஷிவ் நாடாரை அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டி வருகின்றனர்.