ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கலங்கிய நிலையில், துர்நாற்றத்துடன் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், மக்கள் பலருக்கு வாந்தி, பேதியும், சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. சுகாதாரமான தண்ணீர் விநியோகிக்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் மரப்பாலம்ரோடு கே.எஸ்.நகர் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
அப்போது கலங்கிய நிலையில் குடிநீர் வந்தது. மேலும், குடிநீரில் துர்நாற்றம் வீசியது. மக்கள் அந்த பகுதியில் வந்த குடிநீரை பாட்டில் மற்றும் பாத்திரத்தில் பிடித்துக்கொண்டு கே.எஸ்.நகர் 5–வது வீதிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மக்கள், “ஈரோடு கே.எஸ்.நகர் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து கலங்கிய நிலையில் வந்தது. குடம், பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கும்போதே, பயங்கரமாக துர்நாற்றம் வீசுகிறது. கடந்த ஒரு வாரமாக தண்ணீர் கலங்கிய நிலையில் தான் விநியோகம் செய்யப்பட்டது.
குடிநீர் சுகாதாரமற்ற முறையில் விநியோகிப்பதால் எங்கள் பகுதியில் பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர் – சிறுமிகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதனால் தினமும் மருத்துவமனைக்குச் சென்று வருகிறோம்.
ஆழ்துளை கிணறு வசதி உடையவர்கள் அந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், நாங்கள் பெரும்பாலும் மாநகராட்சி குடிநீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஏற்கனவே வாந்தி, பேதி ஏற்பட்டு உள்ளதால் டெங்கு, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக தண்ணீர் விநியோகம் செய்யும் மாநகராட்சி ஊழியரிடம் கேட்டால் ஒரு வாரத்திற்கு குடிநீர் இப்படிதான் இருக்கும் என்று தெரிவித்தார். மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் முறையாக பதில் அளிப்பதில்லை. எனவே எங்கள் பகுதியில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்கள் தெரிவித்தனர்.
