Asianet News TamilAsianet News Tamil

கோடீஸ்வரராக மாறிய சர்வேயரின் உதவியாளர் - பரபரப்பு தகவல்கள்

serviour asst-business-man
Author
First Published Dec 24, 2016, 8:37 AM IST


சைக்கிளில் வலம் சென்று கொண்டிருந்த சர்வேயரின் உதவியாளர்பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாகியது எப்படி என பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கே.ரத்தினம் (54). நில அளவைத்துறையில் சர்வேயரின் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். சர்வேயரின் உதவியாளராக இருந்த ரத்தினம், வேலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

1980ம் ஆண்டு டிரான்ஸ்பராகி திண்டுக்கல் சென்றார். அங்கு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். பிளாட் விற்பனையில் பார்த்த லாபத்தை கொண்டு செங்கல் சூளை, கிரஷர் உள்பட பல்வேறு தொழில்களிலும் கால் பதித்தார். இதற்காக 2005ல் அரசு வேலையை ராஜினாமா செய்தார் என கூறப்படுகிறது.

பின்னர் முழு மூச்சாக மணல் குவாரி தொழிலில் இறங்கினார். அதன்பின்னர் ஏறுமுகம்தான். 2006ல் மணல் குவாரியில் கொடி கட்டி பறந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த படிக்காசு என்பவருடன் நட்பு ஏற்பட்டது. 2011ல் புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரனின் நட்பு கிடைத்தது. ராமச்சந்திரன் மூலம் சேகர்ரெட்டியின் தொடர்பு ஏற்பட்டது.

மணல் குவாரி தொழிலில் சேகர் ரெட்டியுடன் பார்ட்னரானார். இதனால் தமிழகம் முழுவதிலும் மணல் குவாரிகளின் சப் கான்ட்ரக்ட் இவருக்கு கிடைத்தது. சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மைண்ட்ஸ் நிறுவனத்திலும் பார்ட்னரானார். கிராவல் எனப்படும் செம்மண் அள்ளும் உரிமமும் ரத்தினத்திடம் வந்தது.

இதை தொடர்ந்து, தற்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, ரத்தினம்தான் சேகர் ரெட்டிக்கு மாற்றிக் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ரத்தினம் தற்போது திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரியில் முதன்மை செயல் அலுவலராக உள்ளார். திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் இவருக்கு சொந்தமான பிரமாண்ட ரத்தின விலாஸ் உணவகம் உள்ளது. சென்னையில் முகப்பேர், தி.நகர் மற்றும் புதுச்சேரியிலும் வீடு உள்ளது. திண்டுக்கல்-திருச்சி சாலையில் இவருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனமான தரணி குழுமம் செயல்படுகிறது.

தாடிக்கொம்பில் நவீன முறையில் இயங்கும் செங்கல் தொழிற்சாலையும் உள்ளது. திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஐயலூரில் வண்டி கருப்பண்ணசாமி கோயிலில் ஆடி மாத கடைசி வாரத்தில், ஆண்டுதோறும் 500 கிடா வெட்டி பக்தர்களுக்கு சிறப்பான விருந்து ஏற்பாடு செய்வார்.

அப்போது இவருக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான லாரிகளுக்கு இங்கு தான் பூஜை நடைபெறும். இந்த விழாவில் அதிமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகளும் பங்கேற்பது வழக்கம்.

கடந்த 1999ம் ஆண்டு நில அளவைத்துறையில் உதவியாளராக வேலை செய்தபோது, ரத்தினம் வீட்டு லோன் ரூ.2 லட்சம் கேட்டு விண்ணப்பித்தார். உரிய சம்பளம் இல்லாததால், இந்த தொகை வழங்க முடியாது என இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

தற்போது ரத்தினத்தின் வசம் விலை உயர்ந்த ஆடி, ஜாகுவார், பென்ஸ் போன்ற 10 கார்கள் உள்ளன. இந்த கார்களின் மதிப்பு மட்டுமே ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios